கோலாலம்பூர், ஜன. 23 - வெளிநாட்டிலிருந்து இரும்பு மற்றும் உலோகப் பொருள் கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வட்டாரத்திலுள்ள ஏழு நிறுவன வளாகங்களில் இம்மாதம் 17ஆம் தேதி போலீசார் நடத்திய சோதனையில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு 11 கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன
இச்சோதனையில் 33 முதல் 50 வயதுக்குட்பட்ட இரு உள்ளூர் ஆடவர்கள், ஒரு பெண் மற்றும் மூன்று வெளிநாட்டினர் அடங்கிய ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் கூறினார்.
கட்டுமானத் துறைக்கு இரும்பு மற்றும் உலோகப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கட்டுமானத் துறையில் பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கான செல்லுபடியாகும் நிலையான இணக்கச் சான்றிதழை (பி.பி.எஸ்) சமர்ப்பிக்கத் தவறியது உட்பட பல்வேறு குற்றங்கள் இச்சோதனையில் கண்டறியப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைந்த சோதனையின் போது நாட்டில் கட்டுமானத் துறையில் பயன்படுத்த சிஐடிபியின் செல்லுபடியாகும் நிலையான இணக்கச் சான்றிதழ்கள் (பிபிஎஸ்) இல்லாத இறுதிப் பொருட்கள் என வகைப்படுத்தப்பட்ட பல உலோகப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அஸ்மி கூறினார்.
மேலும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படும் பகுதி பூர்த்தி செய்யப்பட்டவை என வகைப்படுத்தப்பட்ட இரும்பு மற்றும் உலோகப் பொருட்களும் இச்சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் வளாகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் 8,939 டன் தொழிற்சாலை இரும்பு மற்றும் எஃகு, 5 கொள்கலன்கள், 12 ஃபோர்க்லிப்ட்கள், 40 எரிவாயு கலன்கள் உட்பட பல்வேறு வகையான உலோக பொருட்களும் அடங்கும்.
மலேசியாவில் உள்ள தர நிர்ணய ஆணையத்தின் தரநிலைகளுக்கு இணங்காத உலோகம் மற்றும் இரும்புப் பொருட்களைப் பயன்படுத்துவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அஸ்மி கூறினார்.


