தோக்கியோ, ஜன. 23 - புகுஷிமா மாநிலத்தின் அய்ஸூ பகுதியில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதே அளவிலான பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் ஏற்படும் என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நில அதிர்வுகள் காரணமாக நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள் மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் சாத்தியம் உள்ளதால் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு அம்மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.49 மணிக்கு ஏற்பட்டது. அய்ஸூ பகுதியில் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்தது. ஹினோமேட்டா கிராமத்தில் ஜப்பானிய அளவில் ஐந்திற்கும் குறைவான நில அதிர்வு பதிவானது.
புகுஷிமா, டோச்சிகி, குன்மா மற்றும் நிகாட்டா மாநிலங்களின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டன. அதே நேரத்தில் கான்டோ மற்றும் தோஹோகு பகுதிகள் உட்பட பரந்த பகுதியில் பலவீனமான நில அதிர்வு ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த செவ்வாய்கிழமை முதல் இப்பிராந்தியத்தில் நில அதிர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5 .00 மணிக்குள் 15 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன என்று என்.எச்.கே. தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.
இந்த பூகம்பம் காரணமாக யாருக்கும் பாதிப்பு அல்லது சேதங்கள் ஏற்பட்டது பற்றிய தகவல்கள் எதுவும் வரவில்லை. சாத்தியமான நில அதிர்வுகள் மற்றும் இரண்டாம் நிலை பேரழிவுகள் குறித்து அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.


