ஷா ஆலம், ஜன. 23- தஞ்சோங் காராங், தாமான் ஸ்ரீ திராம் என்ற இடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு இரட்டை மாடி வரிசை வீடுகள் சேதமடைந்ததோடு பதின்ம வயது இளைஞர் ஒருவரும் தீக்காயங்களுக்குள்ளானார்.
அந்த 16 வயது இளைஞருக்கு கையில் இரண்டாம் நிலை தீக்காயம் ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்று காலை 11.36 மணியளவில் தமது தரப்புக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தீயைக் கட்டுப்படுத்த 16 உறுப்பினர்களைக் கொண்ட குழு மூன்று தீயணைப்பு இயந்திரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தை அடைந்த போது தலா 1,200 சதுர அடி பரப்பளவைக் கொண்ட நான்கு 'ஏ' பிரிவு இரட்டை மாடி மாடி தொடர் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இரண்டு வீடுகள் தீயில் 50 விழுக்காடு பாதிக்கப்பட்ட வேளையில் மற்ற இரண்டு வீடுகள் 30 சதவிகிதம் சேதமடைந்தன. மேலும் அணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அகமது முக்லிஸ் கூறினார்.


