சுங்கை பூலோ, ஜன. 23- புக்கிட் லஞ்சான் தொகுதியில் உள்ள கம்போங்
டேசா அமானில் சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் கரைகளை தரம்
உயர்த்த பத்து லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் வெள்ளியை உட்படுத்திய இத்திட்டத்தின் முதல் கட்டப் பணி
கடந்த 2023ஆம் ஆண்டு முற்றுப்பெற்ற வேளையில் எஞ்சியுள்ள பணிகளை
உள்ளடக்கிய இரண்டாம் கட்டத் திட்டம் எதிர்வரும் ஜனவரி 28ஆம் தேதி
முற்றுப் பெறும் என்று புக்கிட் லஞ்சான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
புவா பெய் லிங் கூறினார்.
ஆற்றின் கரைகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட இவ்விரு
திட்டப் பணிகளும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் நிதி
ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
முன்பு அப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் ஆற்றின்
கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு சுற்றுவட்டாரத்திலுள்ள சுமார் 100
வீடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உண்டானது என்று அவர்
தெரிவித்தார்.
கம்போங் டேசா அமான் ஆற்றின் கரைகளை நேற்று பார்வையிட்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வட்டார மக்களின் சௌகர்யம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு
இந்த திட்டம் வரும் சீனப் புத்தாண்டுக்கு முன்பாகப் பூர்த்தியடைவது உறுதி
செய்யப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.


