ஷா ஆலம், ஜன. 23 - கிள்ளானில் உள்ள எரிவாயு சேமிப்பு தொழிற்சாலை
ஒன்றில் நேற்று முன்தினம் மாலை 6.32 மணியளவில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் காயமடைந்த அந்நிய நாட்டுப் பிரஜை மருத்துவமனையில்
உயிரிழந்தார்.
மூன்றாம் கட்டத் தீக்காயங்களுக்கு உள்ளான அந்த ஆடவர் கிள்ளான்,
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் காலமானதை மருத்துவ
அதிகாரி உறுதிப்படுத்தியதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி எஸ். விஜயராவ் கூறினார்.
இந்த தீவிபத்தில் உயிரிழந்த ஆடவர் உள்பட மூவர் காயங்களுக்குள்ளான
வேளையில் மேலும் மூவர் காயமின்றி உயிர்த்தப்பியதாக அவர்
குறிப்பிட்டார்.
அந்த தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த திரவமய
பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி.) கலன்களிலிருந்து தீப்பரவியதாக
சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தினால் சுமார் 50 லட்சம் வெள்ளி வரை சேதம்
ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுவதாகக் கூறிய விஜயராவ்,
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தடயவியல் பிரிவினர் சம்பவ
இடத்தில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
கிள்ளான் தொழில்பேட்டை ஒன்றிலுள்ள எரிவாயு சேமிப்பு
தொழிற்சாலையில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில்
அத்தொழிற்சாலை முற்றாக அழிந்ததோடு அருகிலுள்ள இரு
தொழிற்சாலைகளும் சேதமுற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது
முக்லிஸ் மொக்தார் முன்னதாகக் கூறியிருந்தார்.


