(ஆர்.ராஜா)
ஷா ஆலம், பிப் 23 - சிலாங்கூர் மாநில அரசு நிலையிலான 2025 பொங்கல்
விழா வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சிகிஞ்சானில் நடைபெறவுள்ளது.
இரு பிரிவுகளாக நடத்தப்படும் இந்த விழாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார் என்று லீமாஸ் எனப்படும் பௌத்த,
கிருஸ்துவ, இந்து, தாவோ சமயங்களுக்கான சிறப்புச் செயல்குழுவின்
இணைத் தலைவர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
பொங்கல் விவசாயத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு விழாவாகவும் உழவர்
திருநாளாகவும் விளங்கும் காரணத்தால் இவ்வாண்டு பொங்கல் விழாவை
நெல் விளையும் பூமியான சிகிஞ்சானில் நடத்த தாங்கள் முடிவெடுத்ததாக
மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இந்த பொங்கல் விழாவின் முதல் நிகழ்வு சிகிஞ்சான், சுங்கை பூரோங்,
பாரிட் 4, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் காலை 8.00 மணி முதல்
பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் தமிழர்களின்
பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலைகள் சார்ந்த அங்கங்களுக்கு
முக்கியத்தும் அளிக்கப்படும்.
அன்றைய தினம் இரவு 7.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை
நடைபெறும் விருந்துடன் கூடிய பொங்கல் நிகழ்வுக்கு மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்பார். இந்த நிகழ்வில் மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பிரமுகர்களும் கலந்து
கொள்வர் என்றார் அவர்.
கடந்தாண்டு இந்த பொங்கல் விழா பந்திங் தொகுதியில் நடத்தப்பட்ட
நிலையில சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினரும் ஊராட்சி
மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ இங் சுயி லிம்மின் வேண்டுகோளுக்கு இணங்க இம்முறை இவ்விழா பசுமை
பூமியான சிகிஞ்சானில் நடத்தப்படுகிறது என்று அவர் நேற்று தமது
அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
அடுத்தாண்டு பொங்கல் விழா அம்பாங்கில் நடத்தப்படும் எனக் கூறிய
அவர், மாநிலத்தில் அனைத்து மக்களும் மாநில அரசின் பொங்கல்
விழாவில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த விழாவை அனைத்து
தொகுதிகளிலும் நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார்.
இந்த பொங்கல் விழாவில் பொது மக்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்கும்படி
பாப்பராய்டு கேட்டுக் கொண்டார்.


