புத்ராஜெயா, ஜன 22- துருக்கியின் போலு மாநிலத்தின் கர்தல்காயாவில் உள்ள ஸ்கை ரிசார்ட், கிராண்ட் கார்ட்டல் ஹோட்டலில் ஏற்பட்ட மிக மோசமான தீவிபத்தில் 76 பேர் பலியானதோடு மேலும் 51 பேர் காயமடைந்தனர்.
அங்காராவில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள துணைத் தூதரகம் மூலம் இச்சம்பவத்தின் சமீபத்திய நிலவரங்களை தாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா என அழைக்கப்படும் வெளியுறவு அமைச்சு இன்று ஒரு அறிக்கையில், தெரிவித்தது.
இப்பேரிடருக்காக துருக்கி குடியரசு அரசாங்கம், நாட்டு மக்கள், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேசிய அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவிக்கிறது. துருக்கியுடன் மலேசியா ஒன்றுபட்டு நிற்கும் அதேவேளையில் இந்த கடினமான சூழலை எதிர்கொள்வதற்கான வலிமை பெற பிரார்த்தனை செய்கிறது என்று விஸ்மா புத்ரா தெரிவித்தது.
தூதரக உதவி தேவைப்படும் துருக்கியில் உள்ள மலேசியர்கள் அங்காராவில் உள்ள மலேசியத் தூதரகத்தை அலுவலக நேரத்தில் +(90) 312 446 35 47/48 என்ற எண்ணில் அல்லது அலுவலக நேரத்திற்குப் பிறகு +(90) 507 812 8406 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் mwankara@kln.gov.my என்ற மின்னஞ்சல் வழியாகவும் உதவி கோரலாம்.
இது தவிர்த்து அவர்கள் இஸ்தான்புல்லில் உள்ள மலேசியாவின் துணைத் தூதரகத்தை +(90) 212 989 10 01/09 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் அல்லது +(90) 531 716 0551 அலுவலக நேரத்திற்குப் பிறகு தொடர்பு கொள்ளலாம். mwistanbul@kln.gov.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா நேற்று இரவு தெரிவித்தார்.


