கோலாலம்பூர், ஜன. 22- போலி டத்தோஸ்ரீ விருதை வைத்திருப்பதாக
சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு எதிராக காவல் துறையினர் விசாரணை
அறிக்கையைத் திறந்துள்ளனர்.
போலி டத்தோஸ்ரீ விருது வைத்திருக்கும் ஆடவர் ஒருவர் பண்டார்
பூச்சோங் ஜெயாவில் முறையான அனுமதியின்றி ஆயுர்வேத சிகிச்சை
வழங்கும் விவகாரம் சமூக ஊடகத்தின் வழி தங்கள் கவனத்திற்கு
வந்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன்
கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் 2017ஆம் ஆண்டு விருதுகள் தொடர்பான
சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அம்மையம் மீது நேற்று அதிரடிச் சோதனை நடத்திய சுபாங்
ஜெயா மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரிகள் அழகு மற்றும் சுகாதார
பராமரிப்புச் சேவையை வழங்கி வரும் அம்மையம் ஊராட்சி மன்றத்தின்
முறையான அனுமதியைப் பெறவில்வில்லை என்பதை உறுதிப்படுத்தினர்
அவர் குறிப்பிட்டார்.
அந்த மையத்திற்கு சீல் வைக்கும் நடவடிக்கையை சுபாங் ஜெயா மாநகர்
மன்றம் மேற்கொண்டது. இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை
நடத்தப்பட்டு வருவதால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில்
ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக்
கொண்டார்.


