சிக், ஜன 21: இவ்வாண்டு மாணவர் இடைநிற்றல் பிரச்சனைக்குக் கல்வி அமைச்சு முழு கவனம் செலுத்தவுள்ளது.
இடைநிற்றல் தொடர்பான பிரச்சனையை ஆராய, நாடு முழுவதும் உள்ள 143க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அமைச்சின் உயர் நிர்வாகம் செல்லவுள்ளதாக அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
''பள்ளி வருகைப் பிரச்சனையில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஆறாம் வகுப்பிலிருந்து முதலாம் படிவத்திற்குச் செல்லும் மாணவர்களை கவனிக்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து முதலாம் படிவத்திற்குச் செல்லும் போது இடைநிற்றல்கள் இல்லை என்றால், இப்பிரச்சனையை மிக எளிதாகச் சமாளிக்க முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் 18 வகையான நிதி உதவிகள், இடைநிற்றல் பிரச்சனையை எவ்வாறு தீர்க்க உதவும் என்பதையும் கல்வி அமைச்சு ஆராயும் என்று ஃபட்லினா மேலும் தெரிவித்தார்.
பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 18 நிதி உதவிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.


