ஜோர்ஜ் டவுன், ஜன 21: இன்று அதிகாலை துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலையில் merempit சட்டவிரோத பந்தய நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் விபத்தில் இறந்தார்.
17 வயதுடைய அந்த இளைஞன் பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என தென்மேற்கு மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி சசலீ ஆடம் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக தென்மேற்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (ஐபிடி) போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு (பிஎஸ்பிடி) அதிகாலை 4.30 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்தது.
ஜார்ஜ்டவுனிருந்து பத்து மவுங் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேல் விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பாலிக் புலாவ் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சசாலி கூறினார்.
விசாரணைக்கு உதவ இதுவரை சாட்சிகள் யாரும் முன்வரவில்லை என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
- பெர்னாமா


