ஷா ஆலம், ஜன. 21- கிள்ளான் அருகே உள்ள தாமான் அமான் பெர்டானாவில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிவாயு மற்றும் கனரக வாகன கிடங்குகள் அழிந்ததோடு அருகிலுள்ள தொழிற்சாலைகளும் சேதமடைந்தன.
இந்த தீவிபத்தில் மூன்று வெளிநாட்டினர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளான வேளையில் மேலும் நால்வர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
எரிவாயு சேமிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்டதாக நம்பப்படும் தீ, பக்கத்தில் மற்றும் பின்புறம் உள்ள கனரக இயந்திர சேமிப்பு கிடங்கு மற்றும் தாமிர பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு பரவியது என்று அவர் சொன்னார்.
நள்ளிரவு 12.55 மணியளவில் இத்தீச்சம்பவம் குறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
வட கிள்ளான், தென் கிள்ளான், அண்டலாஸ், புக்கிட் ஜெலுத்தோங், காப்பார், டாமன்சாரா மற்றும் போர்ட் கிள்ளான் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் எரிவாயு சேமிப்பு ஆலை மற்றும் இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கு 80 சதவீதம் அழிந்த வேளையில் தாமிர தொழிற்சாலையின் 20 சதவீதம் பாதிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மொத்தம் 43 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அதிகாலை 2 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறிய அவர், இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சொன்னார்.


