ஈப்போ, ஜன. 21- சுமார் 45 டன் எண்ணெய் டேங்கர் லோரியிலிருந்து
கழன்ற டயர் உருண்டோடு சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று
வாகனங்களை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்
காயமடைந்தனர்.
இந்த விபத்து கிழக்குக் கடற்கரைச் சாலையின் (டபள்யூ.சி.இ.) தெற்கு
நோக்கிச் செல்லும் தடத்தில் சித்தியவான் அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த விபத்தில் டோயோட்டா யாரிஸ் காரில் பயணித்த 36 வயது மாது
இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட வேளையில் 35 வயது ஆடவரும் இரு
பிள்ளைகளும் காயங்களுக்குள்ளானதாக பேராக் மாநில தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர்
சபோராட்ஸி நோர் அகமது கூறினார்.
எனினும், இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஹோண்டா சிவிக், மெர்சிடிஸ்
பென்ஸ் கார் மற்றும் டேங்கர் லோரயின் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பினர்
என்று அவர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 8.40 மணியளவில் புகார்
கிடைத்ததைத் தொடர்ந்து சித்தியவான் மற்றும் ஸ்ரீ மஞ்சோங் தீயணைப்பு
நிலையங்களிலிருந்து புறப்பட்ட தீயணைப்புக் குழுவினர் 13 நிமிடங்களில்
சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் ஹைட்ரோலிக் சாதனங்களைப் பயன்படுத்தி காரின்
இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த பெண்மணியை மீட்டனர். பின்னர்
அவர் இ.எம்.ஆர்.எஸ். வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச்
செல்லப்பட்டார். காயமடைந்த இதர மூவரும் சுகாதார அமைச்சின்
மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர்
குறிப்பிட்டார்.


