கோலாலம்பூர், ஜன. 20 - இலகு இரயில் தடத்தில் (எல்.ஆர்.டி.) நேற்று அத்துமீறி நுழைந்ததாக கொண்டுவரப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பழைய உலோகப் பொருள் சேகரிப்பாளருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 250 வெள்ளி அபராதம் விதித்தது.
நாற்பத்து மூன்று வயதான வோங் ஹான் சுவான் என்பவருக்கு மாஜிஸ்திரேட் ஐனா அசாஹ்ரா அரிபின் இத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
வங்சா மாஜூ, சான் சாவ் லின் எல்.ஆர்.டி. நிலயத்தில் நேற்று மதியம் 3.35 மணிக்கு இக்குற்றத்தைப் புரிந்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1991ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் பிரிவு 62இன் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு படிப்பினையாக இருக்கும் பொருட்டு தகுந்த தண்டனை வழங்குமாறு துணை அரசு வழக்கறிஞர் ஹெஞ்ச் கோ நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
வோங் சார்பில் ஆஜரான தேசிய வழக்கறிஞர் உதவி வாரியத்தின் வழக்கறிஞர் சிம்ரெட் சிங், தனது கட்சிக்காரர் தனியாக இருப்பதோடு நிலையான வருமானம் இல்லாத நிலையில் மற்றும் மறுசுழற்சி பொருள்களை சேகரித்து விற்பதன் மூலம் வாழ்க்கையை நடத்துவதால் அவருக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.


