மலாக்கா, ஜன. 20 - கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை
மலாக்காவிலுள்ள 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,900 இளைஞர்கள் கடன்
மேலாண்மை மற்றும் ஆலோசகச் சேவை நிறுவனத்தின் (ஏ.கே.பி.கே.)
கடன் மேலாண்மைத் திட்டச் சேவையை (பி.பி.கே.) பெற்றனர்.
அந்த இளைஞர்களை சம்பந்தப்பட்ட கடன் தொகையின் மதிப்பு 13
கோடியே 80 லட்சம் வெள்ளியாகும் என்று மலாக்கா மாநில ஏ.கே.பி.கே.
கிளைத் தலைவர் முகமது ஃபாரிட் ஃபாட்சில் கூறினார்.
கடன் பெற்றவர்களில் பெரும்பாலோர் 2,000 வெள்ளி முதல் 4,000 வெள்ளி
வரை மாதம் வருமானம் பெறுபவர்கள் எனக் கூறிய அவர், அவர்களில் 931 பேரின் மொத்த கடன் 6 கோடியே 50 லட்சம் வெள்ளியாகும் என்றார்.
இவர்களில் 52 விழுக்காட்டினர் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு
காரணமாக கடனை நிர்வகிக்க முடியாத நிலைக்கு ஆளாகி கடனைத்
திரும்பச் செலுத்த த் தவறியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
பதினோரு விழுக்காட்டினர எதிர்பாராத சூழல்கள் காரணமாக நிதி
நெருக்கடியை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர். இவர்களின் கடன் மதிப்பு
1 கோடியே 40 லட்சம் வெள்ளியாகும். மேலும் ஆறு விழுக்காட்டினர்
வேலை இழப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களாவர் என்ற அவர்
சொன்னார்.
இளைஞர்கள் பெரும் கடனில் சிக்கியதற்கான காரணத்தைக் கண்டறிந்து
அவர்களை அப்பிரச்சினையிலிருந்து மீட்பதற்கான வழிகளை ஆராய்வதே
தற்போதைய தேவையாகும் என்று பெர்னாமாவிடம் அவர் தெரிவித்தார்.
நடப்பு நிதிச் சவால்களை எதிர்நோக்குவதற்கு நிதித் திட்டமிடல்
தொடர்பில் முறையான கட்டொழுங்கு அவசியம். அத்தியாவசியத் தேவை
தொடர்பான புரிதல், சேமிப்பின் அவசியம், நிதி மேலாண்மை திறன் ஆகியவை அனைத்துத் தரப்பினரும் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயமாகும் என்றார் அவர்.


