காஸா/கெய்ரோ/ஜெருசலம், ஜன. 20- காஸா பகுதியை முற்றாகச்
சீர்குலைத்து மத்திய கிழக்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய 15 மாத
கால போரின் முதல் கட்ட அமைதித் திட்டம் நேற்று அமலுக்கு வந்த
நிலையில் பாலஸ்தீனம் மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுத்த
வேளையில் இஸ்ரேல் 90 பாலஸ்தீன சிறைக்கைதிகளை விடுதலை
செய்தது.
பாலஸ்தீன மக்கள் புகலிடங்களிலிருந்து வெளியேறி தங்கள்
இருப்பிடத்திற்கு திரும்பி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான
வாய்ப்பினை இந்த போர் நிறுத்தம் ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு தேவையான உதவிப் பொருள்களை நிவாரண டிரக்குகள்
விநியோகித்த வேளையில் காஸாவின் பல்வேறு பகுதிகளில்
மறைவிடங்களிலிருந்து வெளியே வந்த ஹமாஸ் பேராளிகளை
கூட்டத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பாலஸ்தீன கைதிகளை ஏற்றிய பஸ் மேற்கு கரையின் ரமல்லா வந்த
போது அவர்களை வரவேற்கும் விதமாக வாண வெடிகள் வெடிக்கப்பட்டன.
கைதிகளை வரவேற்க அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
இஸ்ரேலிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டவர்களில் மேற்கு கரை
மற்றும் ஜெருசலத்தைச் சேர்ந்த 69 பெண்கள் மற்றும் 21 வயது பதின்ம
வயதினரும் அடங்குவர் என்று ஹமாஸ் கூறியது.
இதனிடையே, பாலஸ்தீன பேராளாளிகள் புடைசூழ மூன்று இஸ்ரேலிய
பெண் பிணைக்கைதிகள் செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் ஏறும் காட்சி
காஸாவிலிருந்து நேடியாக ஒளிப்பரப்பப்பட்ட போது டெல் அவிவில்
உள்ள இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சு கட்டிடத்திற்கு வெளியே
குழுமியிருந்த இஸ்ரேலியர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்ததோடு கண்ணீரும்
சிந்தினர்.
கடந்த 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்டத்
தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு பிணையாகப் பிடிக்கப்பட்ட 250
பேரில் இவர்கள் மூவரும் அடங்குவர்.


