பட்டர்வெர்த், ஜன. 20 - ஒரு வழிச்சாலையில் சட்டத்திற்கு புறம்பான
முறையில் எதிர்திசையில் வாகனத்தைச் செலுத்திய ஆடவரின் செயலால்
நான்கு வாகனங்களை உட்படுத்திய விபத்து ஏற்பட்டது. இங்குள்ள செய்ன்
ஃபெர்ரி சாலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இச்சாலை விபத்து
தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவரை போலீசார் நேற்று மாலை கைது
செய்தனர்.
நேற்று மாலை 4.00 மணியளவில் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய
அந்த ஆடவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர்ச் சோதனையில் அவர் போதைப்
பொருளைப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது என்று
செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார்
அப்துல் ரஹ்மான் கூறினார்.
இரத்தப் பரிசோதனை மற்றும் தொடர் விசாரணை நடத்துவதற்காக
அவ்வாடவர் தடுத்து வைக்கப்படுவார் என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் ஜாலான் செய்ன்
ஃபெர்ரியில் நிகந்த நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து
தொடர்பில் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து
விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு புகாரைப் பெற்றதாக அவர்
சொன்னார்.
சாலையின் எதிர்திசையில் திடீரென நுழைந்த அந்த மிட்சுபிட்ஷி லேன்சார்
வாகனம் எதிரே வந்து கொணடிருந்த நான்கு சக்கர இயக்க வாகனம்
மற்றும் இதர இரு கார்களை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் இரு கார்களின் ஓட்டுநர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட
வேளையில் மற்றவர்கள் காயமின்றித் தப்பினர் என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 42(1) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்
கூறினார். இந்த விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில்
பரவலாகப் பகிரப்பட்டது.


