பிரெசெல்ஸ், ஜன. 20 - நாட்டில் வசிப்பவர்களைப் போலவே
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு
வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு மலேசியர்களுக்கு தபால் வழி வாக்களிக்கும் உரிமையை
வழங்குவது தொடர்பான விவகாரத்தை தாம் தேர்தல் ஆணையத்தின்
(எஸ்.பி.ஆர்.) கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளதாக அவர் சொன்னார்.
எஸ்.பி.ஆர். ஒரு சுயேட்சையான அமைப்பாகும். இருப்பினும், இந்த
விவகாரத்தை நான் அவர்களிடம் எழுப்பியுள்ளேன். நாட்டு மக்கள்
அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அவர்கள் வழங்க வேண்டும்
என்று அவர் தெரிவித்தார்.
இங்கு வசிக்கும் சுமார் 200 புலம் பெயர்ந்த மலேசியர்களுடனான தேநீர்
விருந்து மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எனினும், வாக்களிக்கும் நடைமுறையை தூதரகங்கள் வாயிலாக
மேற்கொள்ள வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டேன். கூடுதல் செலவு
ஏற்படும் என்ற போதிலும் பொது மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வேறு
செயல்முறைகளைப் பயன்டுத்தும்படி பரிந்துரைத்துள்ளேன். இந்த
பரிந்துரையை எஸ்.பி.ஆர். ஏற்றுக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.
பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் வன பாதுகாப்புக்கு மலேசிய
முன்னுரிமை அளிக்குமா என வினவப்பட்ட போது, தற்போதைய
அரசங்கத்தின் பணி நிகழ்ச்சி நிரலில் இதுவும் முக்கிய அங்கமாக இடம்
பெற்றுள்ளது என்று அன்வார் பதிலளித்தார்.
ஐரோப்பா காடுகளை முழுமையாக அழித்து விட்டது. அவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் கூற வேண்டாம். நமது வனப்பகுதி தற்போது 54 விழுக்காடாக உள்ளது. மாறாக பசுமையை நுரையீல் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. வனத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாம் கடந்தாண்டு பத்து லட்சம்
மரங்களை நட்டுள்ளோம் என்றார் அவர்.


