சிரம்பான், ஜன. 20 - கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட சாலை
விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியான 17 வயது ஆடவர் பரிதாபமாக
உயிரிழந்தார். இச்சம்பவம் ஜெம்போல், ஜாலான் பகாவ்-கெமாமாயனில்
நேற்று விடியற்காலை நிகழ்ந்தது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் புரோட்டோன் பெர்டானா ரகக்
காரை உட்படுத்திய இந்த விபத்து விடியற்காலை 2.30 மணியளவில்
நிகழ்ந்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
ஹூ சாங் ஹூக் கூறினார்.
30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஓட்டிய புரோட்டோன் பெர்டானா கார்
அச்சாலையில் மேடான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்த்தடத்தில் நுழைந்து
காருடன் மோதியது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தில் தலை மற்றும் காலில் பலத்தக் காயங்களுக்குள்ளான
அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர்
அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் கார் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட
வேளையில் அதில் பயணம் செய்த 16 வயது இளைஞர் காயமின்றி
உயிர்தப்பினார் என்றார் அவர்.
இதனிடையே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 282.9வது கிலோ மீட்டரில்
நிகழ்ந்த மற்றொரு விபத்தில் கார் ஒன்று லோரியின் பின்புறம்
மோதியதில் அக்காரின் ஓட்டுநரான பெண்மணி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்ததாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.
விடியற்காலை 4.20 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது 34
வயதுடைய அப்பெண்மணி கோலக் கிள்ளானிலிருந்து மலாக்கா நோக்கி
பயணித்துக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.


