கோத்தா கினபாலு, ஜன. 20 - சபா மாநிலத்தின் சுங்கை சிபுகா சட்டமன்ற
உறுப்பினர் டத்தோ முகமது ஹம்சான் அவாங் சுபாயின் நேற்றிரவு 11.20
மணியளவில் கோத்தா கினபாலுவில் உள்ள தனியார் மருத்துவமனையில்
காலமானார்.
அறுபத்தைந்து வயதான முகமது ஹம்சானின் மறைவை அவரின்
மைத்துனரான பெராஹிம் நசிப் உறுதிப்படுத்தினார். எனினும், அவரது
மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மறைந்த முகமது ஹம்சானின் உடல் சண்டகான், தாமான் கோங்
லோக்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பின்னர்
பத்து 7 பெங்கிரான் பள்ளிவாசலுக்கு கொண்டுச் செல்லப்படும் என்று அவர்
தெரிவித்தார்.
ஸோகோர் தொழுகைக்குப் பின்னர் அவரது நல்லுடல் பிந்தாங் பாரு,
மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் என பெர்னாமா
தொடர்பு கொண்ட போது பெராஹிம் குறிப்பிட்டார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் மற்றும் இரண்டாவது
நிதியமைச்சரின் உதவியாளராக முன்பு பணியாற்றிய முகமது ஹம்சான்
சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சபா மாநிலத் தேர்தலில் சுங்கை
சிபுவான் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் முகமது ஹம்சான்
களமிறங்கினார். அங்கு நடைபெற்ற ஐந்து முனைப் போட்டியில் அவர் 1,538
வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.


