லண்டன், ஜன. 18 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இங்கிலாந்து பயணம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 1,100 கோடி வெள்ளி சாத்திய முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் 50 கோடி வெள்ளி மதிப்பிலான விமான உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள், தளவாடங்கள், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்குரிய வாய்ப்பும் கிட்டியுள்ளது என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மலேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
மலேசியாவின் பொருளாதாரத்தின் மீதான வலுவான அனைத்துலக நம்பிக்கையை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது. மேலும், மலேசியாவிற்கும் இங்கிலாந்து அரசாங்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் இது குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம், மலேசியா வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு மூலம் நடதாதப்பட்ட வணிகத் தலைவர்களுடனான கலந்துரையாடல்களின் போது முதலீடு செய்வதற்கான ஆர்வமும் தயார்நிலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன என்று அன்வார் கூறினார்.
இங்கிலாந்து நாட்டிற்கான தனது ஐந்து நாள் பணி நிமித்தப் பயணத்தின் போது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உட்பட பல பெரிய நிறுவனங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான இங்கிலாந்து அரசாங்கம் மலேசியாவுடனான தனது ஒத்துழைப்பையும் உறவுகளையும் வலுப்படுத்த விரும்புகிறது. அடுத்த மாதம் இங்கிலாந்து மேம்பாட்டு அமைச்சர் அன்னெலிஸ் டோட்ஸ் மலேசியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து இந்தோ-பசிபிக் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் மார்ச் மாதம் இங்கு வருகை புரியவிருக்கிறார்.
இது வாகனத் தயாரிப்பு, டிஜிட்டல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வங்கி, சொத்துடைமை மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் 1,100 கோடி வெள்ளியை முதலீடு செய்வதற்கான உறுதிப்பாட்டையும் குறிக்கிறது என்று அன்வார் கூறினார்


