கோலாலம்பூர், ஜன. 18 - போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றும் விபத்து அபாயத்தைக் தவிர்க்கும் நோக்கில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சரக்கு வாகனங்களுக்கு நான்கு நாள் சாலைத் தடை அமல்படுத்தப்படும்.
வரும் ஜனவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளிலும் (பெருநாளுக்கு முன்பு) மற்றும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் (விழாக்களுக்குப் பிறகு) இந்த தடை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
பெருநாள் கொண்டாட்டத்திற்காக பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவர் என்பதால் நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தால் இந்த தடை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், அரச மலேசியா காவல்துறையின் 'ஒப் செலாமட்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேசிய வேக வரம்புக் குறைப்பு ஆணை ஜனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை அமல்படுத்தப்படும் என்று அது இன்று ஒரு அறிக்கையில் கூறியது.
இந்த தடை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சீனப் புத்தாண்டு 2025 நடவடிக்கை மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களுடனான ஒருங்கிணைந்த நடவடிக்கையின் வாயிலாக சாலைப் போக்குவரத்து இலாகா அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.
அனைத்து வாகனமோட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சாலையில் செல்லும் போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது


