கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அந்த ஏழு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
இங்குள்ள தாமான் செராஸ் இண்டாவில் உள்ள பொருள் பட்டுவாடா நிறுவனத்தின் கிடங்கில் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.
அந்த நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்ட பொட்டங்கள் பொருட்கள் இன்றி காலியாக இருப்பது குறித்து வாடிக்கையாளரிடமிருந்து புகார் கிடைத்ததை தொடர்ந்து இவ்விவகாரம் கடந்த திங்களன்று நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட மேலாளர் உள் விசாரணை மேற்கொண்ட போது சில ஊழியர்கள் பதிவு செய்யாமல் பொருட்களை கிடங்கில் இருந்து வெளியே எடுத்துச் சென்றது கண்டறியப்பட்ட நிலையில் நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் பொருள்களைத் திருடியதாக சந்தேகமும் எழுந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் போலீசார் சோதனை நடத்தி 21 முதல் 51 வயதுடைய ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர் என்று முகமது ஆஸாம் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஒரு உள்ளூர் ஆடவனும் பெண்ணும் கடந்த வியாழக்கிழமை குற்றவியல் சட்டத்தின் 380 வது பிரிவின் கீழ் அம்பாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். மீதமுள்ள ஐந்து சந்தேக நபர்கள் நேற்று முதல் ஜனவரி 20 வரை நான்கு நாட்களுக்கு தடுப்புக் காலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 381 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது


