லண்டன், ஜன. 18- கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக கிட்டத்தட்ட்ட முற்றாக அழிந்துள்ள காஸாவின் மறு நிர்மாணிப்புக்கு ஒரு டிரிலியன் அமெரிக்க டாருக்கும் மேல் தேவைப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அங்குள்ள மசூதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகள் முற்றாக அழிந்துள்ளதால் அதன் மறுநிர்மாணிப்பு பணிகளுக்கு பெரும் தொகை தேவைப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த மறுநிர்மாணிப்பு பணிகளுக்கு ஒரு டிரிலியன் டாலர் வரை தேவைப்படும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர் என்று தனது இங்கிலாந்து பயணத்தின் போது செய்தி சேகரிக்க உடன் சென்ற மலேசிய ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
காஸாவின் மறுநிர்மாணிப்பை இலக்காகக் கொண்ட பாலஸ்தீன மேம்பாட்டிற்கான கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு தலைமையேற்க மலேசியாவுக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.
கட்டார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியில் போர் நிறுத்த உடன்படிக்கை கடந்த புதன் கிழமை கையெழுத்திடப்பட்டது. காஸாவில் கடந்த 15 மாதங்களாக நிகழ்ந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கலான் இந்த ஒப்பந்தம் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
காஸாவின் மறுநிர்மாணிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளையில் அப்போரில் 46,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையும் இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடியிருப்புகளை இழந்ததையும் நாம் மறந்து விட முடியாது என்று அன்வார் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.
இம்மாதம் 15 முதல் 19 வரை பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு லண்டன் சென்ற பிரதமர் அடுத்தக் கட்டமாக பெல்ஜியத்திற்கு இரண்டு நாள் வருகை மேற்கொள்கிறார்.


