ஜோகூர் பாரு, ஜன. 18- அதிக வருமானத்தைப் பெறும் ஆசையில் பிட்காயின் திட்டத்தில் பங்கு கொண்ட மூதாட்டி ஒருவர் 460,888 வெள்ளியை மோசடிக் கும்பலிடம் பறிகொடுத்தார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் பிட்காயின் முதலீட்டுத் திட்டத்தில் தாம் செய்த முதலீட்டுத் தொகை மோசடி செய்யப்பட்டது தொடர்பில் கணக்காளரான அந்த 61 வயது மூதாட்டியிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது சோஹாய்மி இஷாக் கூறினார்.
அந்த பிட்காயின் முதலீட்டுத் திட்டம் தொடர்பான விளம்பரத்தை பேஸ்புக் பக்கத்தில் கண்ட அந்த மூதாட்டி அதில் சேரும் நோக்கில் அதனுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து பிட்காயின் முதலீட்டுக் குழுவில் அவர் இணைக்கப்பட்டதோடு குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் அந்த முதலீடு தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தாம் பணி ஓய்வு பெறும் கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இத்திட்டத்தில் சேர்வதற்கு அந்த மூதாட்டி முடிவெடுத்துள்ளார். பிட்காயின் நடவடிக்கைளைக் கண்காணிப்பதற்கும் லாபத்தைப் பெறுவதற்கும் ஏதுவாக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யும்படி அம்மூதாட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 30 முதல் இம்மாதம் 16ஆம் தேதி வரை மூன்று வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர் 460,888 வெள்ளியை மாற்றியுள்ளார். அந்த முதலீட்டின் வழி சுமார் 12 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 55 லட்சம் வெள்ளி லாபம் கிடைத்துள்ளது அந்த செயலி வழி அம்மூதாட்டிக்கு தெரிய வந்தது.
எனினும் அந்த தொகையை அவர் மீட்க முயன்ற போது நிர்வாகக் கட்டணமாக மேலும் 550,152.35 வெள்ளியைச் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.
அந்த தொகையைச் செலுத்தாத அந்த மூதாட்டி இத்திட்டத்தில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் செய்தார் என்று முகமது சோஹாய்மி தெரிவித்தார்.


