புத்ராஜெயா, ஜன. 18- ஷா ஆலம் மற்றும் காஜாங்கில் உள்ள அந்நிய நாட்டினர் குடியிருப்பு பகுதிகளில் குடிநுழைவுத் துறையினர் இன்று அதிகாலை நடத்திய சோதனையில் 76 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
முறையான ஆவணங்கள் இன்றி அந்நிய நாட்டினர் தங்கள் பகுதியில் வசிப்பது தொடர்பில் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷபாஹான் கூறினார்.
இந்த அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 374 அந்நிய நாட்டினர் சோதனையிடப்பட்டனர். அவர்களில் 20 முதல் 55 வயது வரையிலான 76 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். முறையான ஆவணங்கள் இல்லாதது, அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள்1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் மற்று 1966ஆம் ஆண்டு கடப்பிதழ்ச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
வங்காளதேசம், நேப்பாளம், மியன்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக ஜோகூர் மாநிலத்தின் பெக்கான் நெனாஸ் தடுப்புக் காவல் முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டன என்றார் அவர்.
இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு அரசு அமலாக்க நிறுவனங்களைச் சேர்ந்த 113 பேர் பங்கு கொண்டதாகக் கூறிய அவர், குடிநுழைவுச் சட்டத்தை மீறி சட்டவிரோதமாக இங்கு தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை குடிநுழைவுத் துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.


