லண்டன், ஜன. 18- நாட்டின் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் நிபுணத்துவத்தை வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் தொழில்நுட்ப ஆளுமையை உலகளாவிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அங்கீகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாட்டில் பல ஆண்டுகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் இந்நாட்டில் தங்கள் முதலீட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் வருகின்றனர் என்றார்.
ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினியோன் டெக்னோலோஜி நிறுவனத்தை உதாரணம் கூறலாம். தங்கள் நாட்டைத் தவிர்த்து மலேசியா போதுமான தொழில்நுட்பத்தையும் நிபுணத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ளது என நம்பும் காரணத்தால் அவர்கள் அண்மையில் 600 கோடி ஈரோ மதிப்பிலான முதலீட்டை இங்கு செய்துள்ளனர் என்று அவர் குறிப்பட்டார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற புலம் பெயர்ந்த மலேசியர்களுடனான கலந்துரையாடல் மற்றும் இரவு விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர்.
நாட்டிலுள்ள உயர்கல்விக் கூடங்களின் தரம் உயர்ந்த நிலையில் உள்ள காரணத்தால் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 140,000 மாணவர்கள் அந்த கல்விக்கூடங்களில் பயில்வதாகவும் அன்வார் கூறினார்.
மலேசியாவின் ஒ.டி.எல். இகோ வோர்ல்ட், சைம்டார்பி மற்றும் டிஎன்பி போன்ற நிறுவனங்கள் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதோடு பொது டெண்டர் முறையில் பல குத்தகைத் திட்டங்களையும் அவை பெற்றுள்ளன என்றார் அவர்.
இங்கிலாந்து மற்றும் இதர வெளிநாடுகளில் பயிலும் மலேசிய மாணவர்கள் தங்களின் அனுபவத்தை பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக தாங்கள் பயிலும் நாடுகளிலே தொடர்ந்து தங்கி வேலை செய்து வரலாம் என்று அவர் தெரிவித்தார்.


