நிபோங் திபால், ஜன 17: கடந்தாண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மடாணி புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் நல்லப் பலனைத் தந்துள்ளது. அதனால், எதிர்வரும் காலத்தில் இத்திட்டம் ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம் என கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் தெரிவித்தார்.
ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு 50 ரிங்கிட்டும், இடைநிலைப் பள்ளி மற்றும் உயர் கல்விக் கூட மாணவர்களுக்கு 100 ரிங்கிட்டுமாக வழங்கப்பட்ட அப்புத்தகப் பற்றுச் சீட்டை, கடந்தாண்டு அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் பயன்படுத்தினர்.
இந்த வெற்றி குறித்து விரைவில் அமைச்சரவையில் தாம் தாக்கல் செய்யவுள்ள அறிக்கையில், இத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தும் பரிந்துரையும் இடம்பெறும் என அவர் விளக்கினார்.
இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சருடன் விவாதிப்பதாக கூறிய ஃபாட்லினா, நல்ல செய்தி கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்தார்.
இத்திட்டம், மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.


