கோலாலம்பூர், ஜன. 17 - ஐந்து ஆண்டுகளுக்கு முன் அபாயகரமான பொருட்களைக் கொட்டியதன் மூலம் ரவாங்கில் உள்ள சுங்கை கோங் ஆற்றை மாசுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனரக இயந்திரப் பட்டறையின் நிர்வாகி மற்றும்
நான்கு இயக்குநர் வாரிய உறுப்பினர்களை செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
அரசுத் தரப்பின் விசாரணையின் முடிவில் உடன்பிறப்புகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களான யிப் கோக் வை (வயது 58), யிப் கோக் முன் (வயது 63), யிப் கோக் குயின் (வயது 55), யிப் கோக் வெங் (வயது 65) மற்றும் நிறுவனத்தின் நிர்வாகி ஹோ வூன் லியோங் (வயது 64) ஆகியோருக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் உள்ளதை நிரூபிக்கத் தவறியதைத் தொடர்ந்து நீதிபதி நோர் ரஜியா மாட் ஜின் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் முடிவில், அரசு தரப்பு சாட்சியங்களைக் கேட்டறிந்தப் பின்னரும் அதிகபட்ச மதிப்பீட்டின் அடிப்படையிலும் ஒன்று முதல் ஐந்து வரையிலான குற்றவாளிகளுக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரம் இருப்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டு குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று நீதிபதி கூறினார்.
அவர்கள் செலுத்திய தலா 400,000 ஜாமீன் தொகை மற்றும் அனைத்துலக கடப்பிதழை திரும்ப ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டார்.


