புத்ராஜெயா, ஜன.17- கடந்த 2019ஆம் ஆண்டு தனது இரண்டு வயது வளர்ப்பு மகனைக் கொன்ற வழக்கில் ஆடவர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படியும் விதித்து இங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முப்பத்து நான்கு வயதான முகமது சோபியுடின் அபு பாக்கார் என்ற அந்த ஆடவருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை நோக்கமின்றி மரணம் விளைவித்த குற்றச்சாட்டாக மாற்றி அவருக்கு 16 ஆண்டுகள் 6 மாதச் சிறைத்தண்டனை வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட அரசுத் தரப்பு மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட டத்தோ அகமது ஜைடி இப்ராகிம் தலைமையிலான 3 நீதிபதிகள் குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
நேற்று நீதிபதிகள் டத்தோ அஜிசுல் அஸ்மி அட்னான் மற்றும் டத்தோ அகமது கமால் முகமது ஷாஹிட் ஆகியோருடன ஒருமனதாக இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அகமது ஜைடி முகமது, சோபியுடினுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் திருத்தம் செய்வதில் உயர்நீதிமன்ற நீதிபதி தவறு செய்துள்ளார் என்றார்.
சோபியுடின் கைது செய்யப்பட்ட தினமான 2019ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி முதல் இத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் இரவு 8.00க்குள் கெடா, குவார் செம்படாக், ஜாலான் யான்-குவார் செம்பென்டாக், குவார் செம்பென்டாக் என்ற இடத்தில் உள்ள இலக்கமில்லா வீட்டில் முகமது அகில் ஹைரி முகமது அஸ்ருல் அப்பாண்டிக்கு எதிராக இக்குற்றத்தை புரிந்ததாக முகமது சோபியுடின் மீது தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


