ஷா ஆலம், ஜன. 17- நாட்டில் நடைபெறவிருக்கும் 2025 ஆசியான்
உச்சநிலை மாநாட்டில் இடம் பெறவிருக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில்
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடும் (சிப்ஸ்) ஒன்றாக
விளங்கும்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் சிப்ஸ்
மாநாடு ஆசியான் தலைவர் பதவியை இவ்வாண்டு மலேசியா
ஏற்றுள்ளதற்கு ஏற்ப ஏக காலத்தில் நடைபெறுகிறது என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நிலவும் அணுக்கமான
ஒத்துழைப்பின் வாயிலாக இந்த வாய்ப்பு சிலாங்கூர் மக்களுக்கு
கிடைத்துள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
மாநில அரசின் பொருளாதாரம் சார்ந்த இரு மாநாடுகளான சிப்ஸ் மற்றும்
எஸ்ஏஎஸ் எனப்படும் சிலாங்கூர் வான் கண்காட்சி ஆகியவை கடந்தாண்டு
எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வர்த்தக பரிவர்த்தனை மதிப்பினை பதிவு
செய்து வரலாறு படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மொத்தம் 88 வான் போக்குவரத்து நிறுவனங்கள் பங்கேற்ற எஸ்ஏஎஸ்
மாநாடு வரலாற்றில் முதன் முறையாக அதிக அதாவது 320 கோடி
வெள்ளி பரிவர்த்தனை மதிப்பை பதிவு செய்தது.
கண்காட்சியுடன் கூடிய இந்த மாநாட்டில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்திடப்பட்டன. இது கடந்த 2023 எஸ்ஏஎஸ் மாநாட்டை விட இரு
மடங்கு அதிகமாகும் என்றார் அவர்.
இதனிடையே, கடந்தாண்டு இரு கட்டங்களாக நடத்தப்பட்ட சிப்ஸ் மாநாடு
மிக அதிகமான அதாவது 1,386 கோடி வெள்ளி பரிவர்த்தனை வாய்ப்புகளை
பதிவு செய்தது என்று அமிருடின் மேலும் சொன்னார்.
இந்த மாநாட்டில் ஆசியான் நாடுகளோடு ஆஸ்திரேலியா, கனடா, சீனா,
பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் பங்கேற்றது
உலக வர்த்தக அரங்கில் பிரசித்தி பெற்ற மாநாடாக இது உருவாகி
வருவதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


