குவாந்தான், ஜன. 17 - இலாபகரமான வருமானம் தருவதாக உறுதியளித்த முதலீட்டுத் திட்டத்தால் கவரப்பட்ட ஆடவர் ஒருவர் வாழ்நாள் சேமிப்பான 137,000 வெள்ளியை இழந்தார்.
அந்த 32 வயது ஆடவர் கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி சந்தேக நபரின் ஆசை வார்த்தைகளை நம்பி கிரிப்டோ முதலீட்டில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டியதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
சந்தேக நபரின் கோரிக்கையை ஏற்று செயலி ஒன்றை அந்நபர் பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் தனது வங்கிக் கணக்கிலிருந்து லூனோ செயலிக்கு 87,000 வெள்ளித் தொகையை மாற்றுமாறு பாதிக்கப்பட்டவருக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த நவம்பர் 28 ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் RASTRHV செயலிக்கு அத்தொகை மாற்றப்பட்டது.
இந்த முதலீடு மூலம் கிடைத்த சுமார் 100,000 வெள்ளி லாபத்தை திரும்பப் பெற 50,000 வெள்ளியை வைப்புத் தொகையாக வைக்கும்படி பாதிக்கப்பட்ட நபர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி நிர்பந்திக்கப்பட்டார்.
வாக்குறுதியளிக்கப்பட்ட லாபத்தைப் பெறாத நிலையில் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
குறுகிய காலத்தில் லாபகரமான வருமானத்தை அளிக்கும் முதலீடுகளை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், மோசடிக்கு ஆளாகாமல் இருக்க அரச மலேசிய போலீஸ் காவல் துறை மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவை முதலில் சரிபார்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.


