கோலாலம்பூர், ஜன. 17- இன்று காலை பகாங் மற்றும் சபாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ரவுப் மற்றும் கோத்தா மருடு மாவட்டங்களில் தலா ஒரு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
தொடர் மழையின் காரணமாக பகாங் மாநிலத்தின் ரவுப் மாவட்டத்தில் இன்று அதிகாலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டு 12 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கம்போங் உலு சுங்கை மற்றும் பத்து மாலிம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் உலு சுங்கை தேசியப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரவுப் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு செயலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.
பஞ்சரான் தித்திவங்சா பகுதியில் நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து பெய்து வரும் மழையால் பத்து மாலிம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வானிலை மேம்பாடு கண்டு, நள்ளிரவு 1.00 மணிக்குப் பிறகு மழை பெய்யவில்லை என்றாலும் ஆறுகள் நிரம்பி வழிவதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணி இன்னும் நடந்து வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபா மாநிலத்தின் மருடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று காலை ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் வெள்ள துயர்துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கம்போங் தமிசான் மற்றும் கம்போங் ராடு திகாமன் ஆகிய இரண்டு கிராமங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன என்று சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


