கோலாலம்பூர், ஜன. 17 - கடந்தாண்டு மக்களை பெரிதும் ஈர்த்த ஒற்றுமை விளையாட்டுகள் இவ்வாண்டும் நடதாதப்படும். அதே சமயம், அளவு ரீதியாகவும் எண்ணிக்கை அடிப்படையிலும் அந்த விளையாட்டுகள் விரிவுபடுத்தப்படும்.
இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் மதிப்பு கூறுகளை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அதே வேளையில் இந்த நிகழ்ச்சியிலும் அதிக பங்கேற்பாளர்களை ஈர்ப்பது தங்களின் நோக்கமாகும் என்று தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் கே.சரஸ்வதி தெரிவித்தார்.
இவ்வாண்டு, இளைஞர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் நிகழ்வுகளை கண்டறிந்து அவற்றை ஊக்குவிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். சிறந்த தொடர்புகளை ஊக்குவிப்பதற்காக பல இனக் குழுக்களை உள்ளடக்கிய 'சுக்கான் பெர்பாடுவான்' (ஒற்றுமை விளையாட்டு) நிகழ்வையும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒற்றுமை விளையாட்டு நிகழ்வுகளில் கடந்தாண்டு ஏறக்குறைய 23,000 பேர் பங்கேற்றனர். இவ்வாண்டு அதனை இன்னும் விரிவாக்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
இங்குள்ள புக்கிட் கியாரா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஒற்றுமைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சரஸ்வதி மேலும் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள தமிழ் இன மக்களால் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும் அதே வேளையில், மலேசியாவில் இந்த கொண்டாட்டத்தின் தனித்துவம் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்பதில் உள்ளது என்றார்.
அனைத்து இன மக்களிடமும் ஈடுபாட்டை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் இந்த கலாச்சார நடைமுறையின் முக்கியத்துவத்தை அனைவரும் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.


