ஷா ஆலம், ஜன. 17- அழகுசாதனப் பொருள் விநியோகம் மற்றும் முதலீடு
தொடர்பான இரு மோசடி புகார்கள் மீது சிலாங்கூர் மாநில போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகு சாதனப் பொருள் தொடர்பான இணைய மோசடியில் சிக்கிய
நிறுவன இயக்குநர் ஒருவர் 12 லட்சம் வெள்ளியை இழந்ததாக சிலாங்கூர்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
கடந்த 2020ஆம்ஆண்டு சுமார் 12 லட்சம் வெள்ளிக்கு அழகு சாதனப்
பொருள்களை கொள்முதல் செய்த நபரிடமிருந்து அந்த இயக்குநர்
இதுவரை எந்த தொகையையும் பெறவில்லை என்று அவர் இன்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அந்த இயக்குநருக்கு அறிமுகமான சம்பந்தப்பட்ட
உளநாட்டு நபர் 2020ஆம் ஆண்டில் அழகுசானப் பொருள்களை
அவரிடமிருந்து கொள்முதல் செய்ததாக ஹூசேன் குறிப்பிட்டார்.
பொருள்கள் அனுப்பப்பட்ட நிலையில் சந்தேக நபரிடமிருந்து இதுரை எந்த
தொகையும் கிடைக்காததைத் தொடர்ந்து இது குறித்து அந்த இயக்குநர்
செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததாக அவர்
சொன்னார்.
இதனிடையே. மற்றொரு நிலவரத்தில் இல்லாத முதலீட்டு விளம்பரத்தை
நம்பி தனியார் நிறுவன நிர்வாகி ஒருவர் தனது சேமிப்புத் தொகையை
இழந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பேஸ்புக் பக்கத்தில் வெளியான முதலீட்டு விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்ட
54 வயதுடைய அந்த நிர்வாகி 11 லட்சம் வெள்ளியை 21 பரிமாற்றங்கள்
மூலம் ஒன்பது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார் என அவர்
கூறினார்.
இவ்விரு மோசடிப் புகார்கள் தொடர்பிலும் குற்றவியல் சட்டத்தின் 420வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும்
சொன்னார்.


