சுங்கை பட்டாணி, ஜன. 17- அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும்
பயணத் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மக்களின்
பிரச்சினைகளை கவனிக்கவும் காது கொடுத்து கேட்கவும் மடாணி
அரசாங்கம் தயாராக உள்ளது.
அதே சமயம், உதவித் தேவைப்படும் மக்களுக்கு ஏஹ்சான் மடாணி
உதவிகளை வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளதாகப் பிரதமரின்
அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் கூறினார்.
உதவிப் பொருள்களை வழங்குவது மட்டும் இந்த பயணத் தொடரின்
பிரதான நோக்கமல்ல. மாறாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரால்
கவனிக்கப்படாத அல்லது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகளை
அடையாளம் காண்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும் என அவர்
தெரிவித்தார்.
இந்த திட்டத்தை தாமே முன்னின்று நடத்த பிரதமர் விரும்புகிறார்.
எனினும், நேரப் பற்றாக்குறை காரணமாக எங்களை அவரின் பிரதிநிதியாக
களத்தில் இறக்கி நாடு முழுவதும் உள்ள மக்களைச் சந்திப்பதற்கான
ஏற்பாட்டைச் செய்துள்ளார். இந்த திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு முதல்
அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
உதாரணத்திற்கு, சுங்கை பட்டாணியில் மாநில அரசினால் தீர்க்க இயலாத
மற்றும் மத்திய அரசின் தலையீடு தேவைப்படும் பிரச்சினை இருந்தால்
அதனை நாங்கள் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு
கொண்டுச் செல்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ வாங் பொது மண்டபத்தில் நடைபெற்ற
நிகழ்வில் 200 பேருக்கு ஏஹ்சான் மடாணி உதவிப் பொருள்களை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் வழங்கியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு
ஏதுவாக மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது
அவசியம் என்றும் அஸ்மான் வலியுறுத்தினார்.


