கோலாலம்பூர், ஜன.16 - சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள நிலையில் ஜோகூர் மற்றும் பேராக்கில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
சரவாக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 22 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேராக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 22 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கானோவிட் விளையாட்டு வளாகத்தில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மாநிலத்தில் மொத்தம் 72 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொந்தியானில் உள்ள மிலாயு ராயா தேசியப் பள்ளி, குளுவாங்கில் உள்ள கஹாங் பல்நோக்கு மண்டபம் மற்றும் கஹாங் தேசிய சீன பாலர் பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செயல் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தெரிவித்தார்.
பேராக் மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
கம்போங் பாடாங் செராய், கம்போங் காசி மற்றும் கம்போங் பெங்கலான் டாமார், மஞ்சோங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் பாடாங் செராய், பெருவாஸில் உள்ள மக்கள் சமயப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


