ஷா ஆலம், ஜன 16: காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளில் உடல் எடையின் பிஎம்ஐ அளவு 28க்குக் கீழ் இருக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும் என்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி உயர்வு செயல்முறை மிகவும் கடுமையானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நிபந்தனை சேர்க்கப்பட்டது என நாட்டின் காவல்துறை தலைவர் டான்ஶ்ரீ ராஸாருடின் ஹூசைன் கூறினார்.
"காவல்துறை பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் திறன்களை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை முக்கியமானது. இதனால், சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவையை வழங்குவதற்காக அதிகாரிகளின் திறனை மேம்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.
பிஎம்ஐ என்பது உயரத்துடன் ஒப்பிட்டு உடல் எடையை மதிப்பிடுவதற்கான ஒரு அளவீடு ஆகும். இதன் மூலம், குறிப்பிட்ட தனிநபர் எடை குறைந்தவரா,அதிக எடை கொண்டவரா அல்லது பருமனா என்பதை தீர்மானிக்க முடியும்.
பெரியவர்களுக்கு, ஆரோக்கியமான பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை இருக்கும். 25.0 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ அதிக எடை மற்றும் 18.5க்குக் கீழ் உள்ள பிஎம்ஐ எடை குறைவாகக் கருதப்படுகிறது.
தனது தரப்பு பதவி உயர்வு செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும், சம வாய்ப்புகளை வழங்குவதற்கும் வலுப்படுத்தியது என்று தலைநகரில் காவல்துறையின் மாதாந்திர கூட்டத்தில் பேசிய போது அவர் விளக்கினார்.
இ-கோர்ஸ் மற்றும் இணைய திறன் மதிப்பீடு (PeKAT) மூலம் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கான பதவி உயர்வு கொள்கையை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ரஸாருடின் தெரிவித்தார்.
"இந்த நடவடிக்கை குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் பொருத்தமான, திறமையான, தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.


