கோலாலம்பூர், ஜன. 16 - நாட்டின் பல்லின பன்முகத் தன்மை மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் நல்லிணக்கப் பேரணி எதிர்வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் நேற்று தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேச தினம் மற்றும் உலக சர்வமத நல்லிணக்க வாரம் (ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும்) ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு மெர்டேக்கா சதுக்கத்தில் இந்த பேரணி நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வு நமது சமூகத்தில் விரிவான மற்றும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்பர் என்று அவர் பெர்னாமாவின் 'ருவாங் பிச்சாரா' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராகப் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த பேரணி தொடர்பான கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், மடாணி நல்லிணக்க முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இரண்டாவது நிகழ்வாகவும் இது அமைகிறது என்றார் அவர்.
தேசிய ஒற்றுமை அமைச்சின் பிரதான முன்னெடுப்புகளில் ஒற்றுமை சுற்றுச் சூழல் அமைப்பு, மடாணி நல்லிணக்க முன்னெடுப்பு ருக்குன் நெகாரா ஆய்வு மற்றும் சமூகவியல் -கலாச்சார சமூகம் ஆகியவையும் அடங்கும்.


