கோலாலம்பூர், ஜன. 16 - கடந்த மாதம் செமினி வட்டாரத்தில் ஆடவர்
ஒருவர் தாக்கப்பட்டதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்
நான்கு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை சித்தரிக்கும் காணொளி நேற்று முன்தினம்
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாகக் கூறிய காஜாங் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசுப், இந்த சம்பவம் கடந்த மாதம்
29ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு நிகழ்ந்தது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
இரு சந்தேகப் பேர்வழிகள் இம்மாதம் 8 மற்றும் 12ஆம் தேதிகளில் கைது
செய்யப்பட்ட வேளையில் மேலும் இருவர் நேற்று முன்தினம் பிடிபட்டனர்.
32 முதல் 36 வயது வரையிலான அந்த ஆடவர்களில் மூவர் போதைப்
பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான முந்தையப் பதிவுகளைக்
கொண்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக
குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 013-5495236 என்ற
எண்களில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அமிருள் அப்துல வஹாப்
அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளும்படி
அவர் கேட்டுக் கொண்டார்.


