இஸ்தான்புல், ஜன. 16 - காஸா தீபகற்பத்தில் போர் நிறுத்தத்தை அமல்
செய்ய மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்துள்ள
நிலையில் அந்த பிராந்தியத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி
போர் நிறுத்தம் அமல் செய்யப்படும் என்று கட்டார் பிரதமரும் வெளியுறவு
அமைச்சருமான முகமது பின் அப்துல் ரஹ்மான் கூறினார்.
மொத்தம் 45 நாட்களுக்கு அமலில் இருக்கும் இந்த போர் நிறுத்த
உடன்படிக்கையின் முதல் கட்டத்தில் 33 இஸ்ரேலிய பிணைக்கைதிகளும்
எண்ணிக்கை தெரிவிக்கப்படாத பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுவர்
என்று அவர் தெரிவித்தார்.
இந்த போர் நிறுத்தத்தை கண்காணிப்பது மற்றும் ஒப்பந்தம் மீறப்படும்
சாத்தியத்தைக் கையாள்வது ஆகிய பணிகளை கட்டார், எகிப்து மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்த அமலாக்க காலத்தில் இராணுவ
நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது எனத் தாங்கள்
எதிர்பார்ப்பதாக முகமது சொன்னார்.


