பெட்டாலிங் ஜெயா, ஜன. 16 - சுக்மான எனப்படும் மலேசிய விளையாட்டுப்
போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக
சிலாங்கூர் அரசு தனது முதலாவது 2026 சுக்மா கூட்டத்தை எதிர்வரும்
திங்கள் அன்று நடத்தும்.
ஷா ஆலம் விளையாட்டரங்கம் தவிர்த்து சுக்மா போட்டிக்கான பிரதான
இடம் இன்னும் அடையாளம் காணப்படாத போதிலும் சில தேர்வுகள்
பட்டியலிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
நாம் ஷா ஆலம் விளையாட்டரங்கின் கட்டுமானத்தை
அவசரப்படுத்துவதன் மூலம் அதன் தரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக்
கூடாது. குறிப்பிட்ட காலத்திற்குள் அத்திட்டம் முற்றுப் பெறுமா என்பது
குறித்து சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளருடன் நாங்கள்
விவாதிக்கவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த போட்டியை மெர்டேக்கா விளையாட்டரங்கம், புக்கிட் ஜாலில்
அரங்கம் அல்லது மெலாவத்தி உள்ளரங்கில் நடத்துவது குறித்து
பரிசீலிக்கவிருக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அவர், சிலாங்கூர் இளையோர் அனைத்துலக கோல்ப்
வெற்றியாளர் போட்டி மற்றும் ஸ்ரீ சிலாங்கூர் பி.கே.என்.எஸ். சிலாங்கூர்
மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியை அவர் தொடக்கி வைத்தார். இந்த
நிகழ்வில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிமும் கலந்து
கொண்டார்.
இதனிடையே, சுக்மா போட்டியின் சில ஆட்டங்களை இதர
மாவட்டங்களில் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் நடத்துவது குறித்து
மாநில அரசு பரிசீலித்து வருகிறது என்றும் அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை விளையாட்டு வசதிகள் இரு
இடத்தை மட்டும் மையமாகக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் அதன்
அமலாக்கம் குறித்து பரிசீலிக்கவிருக்கிறோம். குறிப்பாக சபாக்
பெர்ணத்தில் போட்டிகளை நடத்தினால் தொலைவு மற்றும் செலவினத்தை
கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்றார் அவர்.


