புத்ராஜெயா, ஜன, 16 - உரிமை பறிமுதல் செய்யப்பட்ட 5004 கிலோ எடை
கொண்ட உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியை மலேசியா
தனிமைப்படுத்துதல மற்றும் சோதனை சேவை இலாகா (மாக்கிஸ்) தேசிய
மிருகக்காட்சி சாலையிடம் வழங்கியது.
மொத்தம் 42,023 வெள்ளி மதிப்புள் அந்த இறைச்சி மிருகக்காட்சி
சாலையிலுள்ள விலங்களுக்கு உணவாக வழங்கப்படும் என்று மாக்கிஸ்
தலைமை இயக்குநர் சம்சுல் அக்பார் சுலைமான் கூறினார்.
2011ஆம் ஆண்டு மலேசிய தனிமைப்படுத்துதல் மற்றும் சோதனைச்
சேவைத் துறை சட்டத்தின் 11(1) மற்றும் 3வது பிரிவின் ஷரத்துகளை
பின்பற்றத் தவறியதற்காக உரிமை பறிமுதல் செய்யப்பட்ட பொருளாக
அந்த இறைச்சி விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
எங்களின் இந்த நடவடிக்கையின் வாயிலாக தேசிய மிருகக்காட்சி
சாலையிலுள்ள மிருகங்களுக்கு உணவளிப்பதில் ஏற்படும் செலவுகளை
குறைக்க இயலும் என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் 836,000 வெள்ளி மதிப்புள்ள 91,700 கிலோ
கால்நடை இறைச்சியை பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் தேவைப்படும்
தரப்பினருக்கு தாங்கள் வழங்கியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
உயிரியல் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் தங்கள் தரப்பு ஒருபோதும்
விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்றும் அவர் கூறினார்.


