பட்டர்வொர்த், ஜன. 15 - பயன்படுத்தப்பட்ட துணிகள் நிரப்பப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வரியுடன் சேர்த்து 58 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 45 லட்சம் வெள்ளை கடத்தல் சிகரெட்டுகளை அரச மலேசிய சுங்கத் துறை கடந்த மாதம் 26ஆம் தேதி பறிமுதல் செய்தது.
சிலாங்கூர் மாநிலத்தின் வட கிள்ளான் துறைமுகத்தில் காலை 11.20 மணியளவில் ஒரு கொள்கலனை சுங்கத் துறையின் அமலாக்கப் பிரிவு ஆய்வு செய்தபோது அந்த கடத்தல் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பினாங்கு மாநில சுங்கத் துறை இயக்குனர் ரோஹைசாட் அலி கூறினார்.
அந்த கொள்கலனில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சோதனையில் 22,500 அட்டைப்பெட்டிகளில் 45 லட்சம் வெள்ளை சிகரெட்டுகள் அடங்கிய 175 கார்ட்டன்கள் பயன்படுத்தப்பட்ட ஆடைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சுங்க வரி விதிக்கப்படாதவை என சந்தேகிக்கப்படும் அனைத்து பொருட்களும் 13.7 லட்சம் வெள்ளி மதிப்புடையவை என கருதப்படுகிறது. அந்த சிகிரெட்டுகளுக்கான வரி 44.7 லட்சம் வெள்ளியாகும் என்று அவர் இன்று இங்குள்ள பாகான் ஜெர்மால் அமலாக்க கிடங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுச் செல்லப்படவிருந்த அந்த கொள்கலன் டிரான்சிட் நோக்கத்திற்காக கோலக் கிள்ளான் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
1967 ஆம் ஆண்டு சுங்கத் துறைச் சட்டத்தின் 135(1)(ஏ) பிரிவின் கீழ் மேல் விசாரணைக்காகக் கொள்கலன் கைப்பற்றப்பட்டதாக ரோஹைசாட் கூறினார்.


