கோலாலம்பூர், ஜன. 15 - இரு வாரங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவரின் பணப்பையை கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இரு இந்தோனேசிய ஆடவர்களுக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு பிரம்படியும் விதித்து தீர்ப்பளித்தது.
அரி அப்லியா லுபிஸ் (வயது 26) மற்றும் உமர் அர்டியான்ஷா (வயது 32) ஆகியோருக்கு இத்தண்டனையை வழங்கிய நீதிபதி இஸ்ராலிஸாம் சனுசி, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தண்டனையும் அவர்கள் கைது செய்யப்பட்ட தினமான ஜனவரி 6 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகக் கூறினார்.
இங்குள்ள டாங் வாங்கி, லோரோங் ஹாஜி தாயிப் என்ற இடத்தில் இம்மாதம் 5ஆம் தேதி மதியம் 12.55 மணிக்கு 64 வயதான யீ சூய் லான் என்ற அந்த மூதாட்டியின் பணப் பையைக் கொள்ளையடித்ததாக அவ்விருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 395வது பிரிவின் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அந்த மூதாட்டியின் தோல் பை மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட உடமைகளை போலீசார் அவர்களிடமிருந்து மீட்டனர்.
முன்னதாக பாதிக்கப்பட்டவர் வயதானவர் என்பதோடு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும்
வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில், கருணை மனுவைச் சமர்ப்பித்த குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டியதன் அடிப்படையில் குறைந்த தண்டனை வழங்குமாறு கோரினர்.


