அபுடாபி, ஜன. 15- மலேசியாவின் தனித்துவமிக்க நிலைப்பாடு, விரிவான
மற்றும் நீடித்த பொருளாதாரக் கொள்கையை வரைவதில் நாட்டிற்கு
பெரிதும் துணை புரிகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
பல்லின, சமய மற்றும் கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கும்
நாடாக மலேசியா விளங்கிய போதிலும் அரசியல் ரீதியாக காணப்படும்
நிலைத்தன்மை மலேசியாவை அதிர்ஷ்டமிக்க நாடாக விளங்கச்
செய்கிறது. அதே சமயம், இந்த பிராந்தியத்தில் மிகவும் அமைதி நிறைந்த
நாடாகவும் துரித பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் தேசமாகவும் இது
விளங்குகிறது என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு ஆசியான் தலைவர் பொறுப்பை மலேசியா ஏற்றுள்ள
நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசு உள்பட வளைகுடா ஒத்துழைப்பு மன்ற
நாடுகளுடன் (ஜி.சி.சி.) அது அணுக்கமான ஒத்துழைப்பை பேணி வருகிறது
என்று கடந்த செவ்வாய்க்கிழமை இங்கு நடைபெற்ற 2025 அபுடாபி
நிலைத்தன்மை வார நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
பல்லுயிர் வியூகத்தில் மலேசியா எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இந்த
நிகழ்வின் நெறியாளராகப் பணியாற்றிய அனைத்துலக சுற்றுச்சூழல்
மீட்சித் சங்கத்தின் தலைவர் ரஸான் அல்- முபராக் எழுப்பிய கேள்விக்கு
பதிலளித்த அன்வார், இவ்விவகாரத்தில் அமலாக்கம் மற்றும் கொள்கைத்
தெளிவு முக்கிய சவாலாக விளங்குவதாக க் கூறினார்.
நாங்கள் புதியவர்கள் அல்ல என்றாலும், எங்களின் பெரிய முயற்சி
நிச்சயமாக புதிது. இப்போதைக்கு எங்களின் பலம் என்னவென்றால்
செமிகண்டக்டர் மையத்தைக் உதாரணமாக குறிப்பிடலாம். இருப்பினும்,
இது போதாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை ரீதியாக சூழலியல் முறை சரிசெய்யப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
நிர்வாக மேலாண்மையைப் பொறுப்புணர்வு என்பது கொள்கைகளை
வகுப்பது மட்டுமல்ல. மாறாக, வனங்கள், குன்றுகள், மலைகள்
சூறையாடப்படுதை தடுப்பதும் நிலைத்தன்மையாகும். உறுதியுடனும்
துடிப்புடனும் நாம் பின்பற்ற வேண்டிய நன்னெறி தேவை இதுவாகும்
என்றார் அவர்.


