லண்டன், ஜன. 15 - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மலேசியாவின்
நான்காவது பெரிய வர்த்தக பங்காளியாக விளங்கும் இங்கிலாந்துக்கு
பிரதமர் ஐந்து நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் பயணம் செய்த விமானம் உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு 10.50க்கு
(மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 6.50 மணி) ஸ்டென்ஸ்டேட் விமான
நிலையம் வந்தடைந்தது.
ஐக்கிய அரபு சிற்றரசுக்கான மூன்று நாள் பணி நிமித்தப் பயணத்தை
முடித்துக் கொண்டு இங்கிலாந்துக்கான பணி நிமித்தப் பயணத்தை பிரதமர்
தொடர்கிறார்.
விமான நிலையத்தில் பிரதமரை இங்கிலாந்து மற்றும் வட
அயர்லாந்துக்கான மலேசிய தூதர் டத்தோ ஜக்ரி ஜாபர், தற்காப்பு அதிகாரி
டத்தோ பிரிகேடியர் ஜெனரல் சாஃப்வான் அஸ்ரி இஸ்மாயில் வெளியுறவு
விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி ரிச்சர்ட் வில்டேஷ் உள்ளிட்டோர்
வரவேற்றனர்.
இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டொர்மரின் அழைப்பின் பேரில் பிரதமர்
இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமராக
பதவியேற்றப் பின்னர் அந்நாட்டிற்கு அன்வார் மேற்கொள்ளும் முதலாவது
பயணம் இதுவாகும்.
பிரதமரின் பயணக் குழுவில் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழிலியல்
அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிஸ், கல்வியமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடீர், தோட்ட மற்றும் மூலத் தொழில்
அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி ஆகியோர் இடம்
பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து பிரதமருடன் இன்று சந்திப்பு நடத்தவிருக்கும் பிரதமர்
அன்வார், இங்கிலாந்து-மலேசியா இரு தரப்பு உறவுகள் குறித்து மதிப்பீடு செய்யும் அதே வேளையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிப்பார்.
மேலும், உயர்கல்வி, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,
வேளாண் மூலப்பொருள் மற்றும் சுற்றுலா குறித்தும் இரு தலைவர்களும்
பேச்சு நடத்துவர்.


