கூச்சிங், ஜன. 15 - இங்குள்ள ஜாலான் ஸ்துதோங் சாலையில் நேற்று
நிகழ்ந்த சாலை விபத்தில் ஐவர் பலியான நிலையில் லைசென்ஸ் இன்றி
காரை செலுத்தி அந்த விபத்துக்கு காரணமாக இருந்ததாக
சந்தேகிக்கப்படும் 16 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
அந்த பதின்ம வயது இளைஞர் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து
எதிர்த்தடத்தில் நுழைந்து இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு
கார்களை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளதாக கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.
இந்த விபத்தில் 16 முதல் 45 வயது வரையிலான ஒரு பெண் உள்ளிட்ட
நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மேலும் ஒருவர்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போது உயிரிழந்ததாக அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனத்தைச் செலுத்தி
மரணத்தை ஏற்படுத்தியது தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை
போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் இந்த சம்பவம் குறித்து
விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


