ஈப்போ, ஜன. 14- இங்குள்ள பாசீர் பூத்தே, புக்கிட் கிளேடாங்கில் நேற்று மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆடவர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
ஐம்பத்து நான்கு வயதான அந்த ஆடவர் மலையேறும் போது திடீரென மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மயங்கி விழுந்தது தொடர்பில் மாலை 3.06 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சபோராட்ஸி நோர் அகமது கூறினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் அவ்வாடவருக்கு சுவாச உதவியை வழங்கினர். எனினும் அவர் உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதி செய்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த ஆடவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.


