தெலுக் இந்தான், ஜன. 14- குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவோருக்கு சமூக சேவை வடிவிலான தண்டனையை வழங்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
நீதிமன்றத்தின் முடிவுக்கேற்ப குப்பைகளைப் பெருக்குவது, கால்வாய்களைச் சுத்தம் செய்வது, பொது கழிப்பறைகளை கழுவுவது போன்ற பணிகளை செய்ய அவர்கள் பணிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.
இத்தகையக் குற்றங்களுக்கு அபராதத் தொகையை 300 வெள்ளியிலிருந்து 500 வெள்ளியாக உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு அதே தவறை மீண்டும் செய்வர். அதே சமயம் சமூக சேவையைச் செய்ய உத்தரவிட்டால் அவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து அத்தகைய குற்றங்களை மீண்டும் புரியமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் முடிவெடுக்கும் பொறுப்பை நாம் நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விடுவோம். நான்கு நாள் தண்டனையை வழங்கினால், அந்த நான்கு நாட்களும் அவர்கள் தெருக்களை பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள தெலுக் இந்தான் நகராண்மைக் கழக கட்டிடத்தில் புதிய இயந்திரங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பொது இடங்களில் குப்பைகளை வீசும் சிறு குற்றங்களைப் புரிவோருக்கு சமூகச் சேவையை தண்டனையாக வழங்குவது தொடர்பான சட்ட மசோதா இவ்வாண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ங்கா கடந்தாண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தார்.


