கோலாலம்பூர், ஜன. 13- ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றிரவை விட இன்று காலை சற்று குறைந்துள்ளது. அதே சமயம், சரவா மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.00 மணி நிலவரப்படி ஜோகூர் மாநிலத்தில் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 3,776 பேராக உள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 4,869 பேராக பதிவாகியிருந்தது.
மாநிலத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள 37 வெள்ள நிவாரண மையங்களில் 1,066 குடும்பங்கள் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
வெள்ளப் பாதிப்பை அதிகம் எதிர்நோக்கியிருக்கும் மாநிலமான கோத்தா திங்கியில் 1,322 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ள வேளையில் அதனைத் தொடர்ந்து ஜோகூர் பாருவில் 780 பேரும் கூலாயில் 546 பேரும் பொந்தியானில் 595 பேரும் குளுவாங்கில் 533 பேரும் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சரவா மாநிலத்தின் மத்திய பகுதியில் உள்ள ரூமா சுஸி லில்லி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குனோவிட்டில் நேற்றிரவு துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டது. இதில் 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேராக் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள துயர் துடைப்பு மையத்தில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் அடைக்கம் நாடியுள்ளனர்.


